பெசன்ட் நகரில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு - சட்டப்பேரவையில் சர்ச்சை
சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச) தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சார்பில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறை அனுமதி கோரப்பட்டது. ஆனால், சட்டம்-ஒழுங்க
பெசன்ட் நகரில் அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பு - சட்டப்பேரவையில் சர்ச்சை


சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச)

தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு மற்றும் மாணவி அனிதாவின் குடும்பத்தினர் சார்பில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு காவல்துறை அனுமதி கோரப்பட்டது.

ஆனால், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சென்னை மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்தது.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை அவசரப் பிரச்சினையாகக் கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல், ஜனநாயக ரீதியில் அமைதியாக நடத்தப்பட இருந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது?அனிதாவின் குடும்பத்தினரும் மாணவர்களும் நினைவுகூரக் கூட இந்த அரசு அனுமதி தராதது ஏன்? என கேள்விகளை எழுப்பினார்.

மேலும் அவர் பேசுகையில், பெசன்ட் நகரில் அனிதா நினைவேந்தல் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றத் திருவிழா நடைபெற்று வரும் சூழலில், பெசன்ட் நகர் பகுதியில் கூடுதல் கூட்டம் கூடுவதால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது என்று உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டியதை அடுத்து, அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்தால், அனுமதி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Hindusthan Samachar / vidya.b