Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 செப்டம்பர் (ஹி.ச.)
இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 311-வது பிறந்தநாளினை கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்
இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுபவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், 1751ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர். இன்றைக்கு நாம் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கு முதன் முதலில் விதை போட்டவர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நெற்கட்டும் செவலை பூர்விகமாக கொண்ட பாளையக்காரரான மாமன்னர் பூலித்தேவன் அவர்கள், இளம் வயதிலேயே வீர உணர்ச்சியையும், கடவுள் பக்தியையும் கொண்டவராக விளங்கினார்.
தனது நிர்வாக திறமையால் சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள். அனைத்து குறுநில மன்னர்களும், ஆங்கிலேயர்களுக்கு பயந்து வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், அசாத்திய துணிச்சலுடன் ஆங்கிலேயர்களுக்கு வரி, கப்பம் கொடுக்க மறுத்த வீரத்தமிழர் மாமன்னர் பூலித்தேவன் அவர்கள்.
பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சாதி பேதங்களை கடந்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர். ஒண்டிவீரன் பகடை மற்றும் வெண்ணிக்காலாடி ஆகியோரை தனது தளபதிகளாக தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தவர்.
மாமன்னர் பூலித்தேவன் அவர்கள் காட்டிய அதே வழியில், ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரப்பாசத்துடனும் செயலாற்றினால் எதிலும் வெற்றி காண முடியும் என்பதை மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN