சினிமா படப்பிடிப்பை போல தினமும் விளம்பர நாடகம் நடத்துகிறார் முதல்வர் விஜய் - டி.டி.வி தினகரன் கடும் தாக்கு
தென்காசி, 01 செப்டம்பர் (ஹி.ச.) விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்வதற்காக இன்று தென்காசி வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சினிமா படப்பிடிப்பை போல தினமும் விளம்பர நாடகம் நடத்துகிறார் முதல்வர் விஜய் - டிடிவி தினகரன் கடும் தாக்கு


தென்காசி, 01 செப்டம்பர் (ஹி.ச.)

விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்வதற்காக இன்று தென்காசி வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்,

தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு சினிமா படப்பிடிப்பை போலவே நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.

முதல்வர் விஜய் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நிகழ்வை திட்டமிட்டு, கேமராக்களுக்கு முன்பாக நடிப்பது போல செயல்பட்டு வருகிறார் என்றும், இதில் மக்கள் நலன் என்பது சிறிதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டிய டிடிவி தினகரன், டெல்டா பகுதி விவசாயிகளுடன் எந்தவித முன் ஆலோசனையும் நடத்தாமல், அவசர அவசரமாக அணையை திறந்தது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்திற்காக மட்டுமே என்று கூறினார். விவசாய பணிகளுக்கு தேவையான காலத்தில், விவசாய சங்கங்களின் கருத்தை கேட்டு தண்ணீர் திறப்பதுதான் மரபு. ஆனால் இந்த அரசு அதை பின்பற்றவில்லை என்றார்.

மேலும், தற்போது மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கோ அல்லது சம்பா சாகுபடிக்கோ எந்த வகையிலும் பயன்படாது என்றும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

திரைப்படங்களில் நூறு பேரை ஒரே நேரத்தில் அடித்து வீழ்த்துவது போன்ற காட்சிகள் வேண்டுமானால் சாத்தியமாகலாம், ஆனால் நிஜ அரசியல் களம் அப்படியல்ல என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

சினிமாவில் காட்டும் சாகசங்களை நிஜ அரசியலில் முதல்வர் விஜய்யால் ஒருபோதும் செய்து காட்ட முடியாது என்றும், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடிப்பு அல்ல, நிர்வாகத் திறமையும் அனுபவமும் தான் தேவை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

Hindusthan Samachar / vidya.b