Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 01 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் முக்கிய கோவில்களின் புனிதத் தன்மையையும் ஆன்மிகச் சூழலையும் பாதுகாக்கும் நடவடிக்கையாக, 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று (செப்டம்பர் 1) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகங்களுக்குள் பக்தர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுப்பது, ரீல்ஸ் தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் செல்போன் தடை அமலுக்கு வந்துள்ளது.
மேலும் காஞ்சீபுரம் காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர், திருவள்ளூர் வீரராகவர், திருத்தணி முருகன் உள்ளிட்ட கோவில்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட முக்கிய கோவில்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
செல்போன் தடையால் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, கோவில் நிர்வாகங்கள் சார்பில் கட்டண அடிப்படையில் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான செல்போன்களை பாதுகாக்கும் வகையில் பெட்டக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் நிலையில், செல்போன் பாதுகாப்பு பெட்டகங்களின் கொள்ளளவு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறிப்பாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரளும் நாட்களில் கூடுதல் வசதிகள் தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P