கனகம்மாசத்திரத்தில் தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
திருத்தணி, 01 செப்டம்பர் (ஹி.ச.) திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் மழைநீர் வரத்து கால்வாயை அடைத்து சாலை அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ப
சாலை மறியல்


திருத்தணி, 01 செப்டம்பர் (ஹி.ச.)

திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் மழைநீர் வரத்து கால்வாயை அடைத்து சாலை அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கனகம்மாசத்திரம் பகுதியில் மழைநீர் வரத்து கால்வாயை அடைத்து சாலை அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் கிராமத்திற்குள் புகுந்து வீடுகள், பள்ளிகள் மற்றும் கடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மழைநீர் கால்வாயை அடைப்பதை கைவிட்டு, கனகம்மாசத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பேரணியாகச் சென்று, காவல் நிலையம் அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

காலை 11 மணி முதல் நடைபெற்று வரும் மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உயர்மட்ட பாலம் அமைக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் இன்று திருத்தணியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P