திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி
திருப்பூர், 01 செப்டம்பர் (ஹி.ச.) பின்னலாடைத் தொழிலின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை நூற்பாலைகள் செப்டம்பர் மாதத்திற்கு கிலோவுக்கு 7 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த திடீர் விலை உயர்வு திருப்பூர் மண்டலத்தில் உள்ள லட்சக்கணக்கான பின்
திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு - பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி


திருப்பூர், 01 செப்டம்பர் (ஹி.ச.)

பின்னலாடைத் தொழிலின் முக்கிய மூலப்பொருளான நூல் விலையை நூற்பாலைகள் செப்டம்பர் மாதத்திற்கு கிலோவுக்கு 7 ரூபாய் வரை உயர்த்தி அறிவித்துள்ளன.

இந்த திடீர் விலை உயர்வு திருப்பூர் மண்டலத்தில் உள்ள லட்சக்கணக்கான பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

நூற்பாலைகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியலின் படி, திருப்பூரில் அதிகளவில் பயன்படுத்தப்படும் 10-ம் நம்பர் கோம்டு நூல் ஒரு கிலோ 258 ரூபாய்க்கும், 16-ம் நம்பர் நூல் ஒரு கிலோ 268 ரூபாய்க்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்களுக்கு முக்கியமாக தேவைப்படும் 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் 323 ரூபாய்க்கும், 24-ம் நம்பர் நூல் 331 ரூபாய்க்கும், 30-ம் நம்பர் நூல் 334 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பருத்தி பஞ்சின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வருவதும், மின்சார கட்டணம் மற்றும் தொழிலாளர் சம்பள உயர்வு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வருவதுமே இந்த விலை உயர்வுக்கு காரணம் என நூற்பாலை உரிமையாளர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விலை உயர்வை பின்னலாடைத் துறையினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏற்கனவே சர்வதேச சந்தையில் பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுடன் கடும் போட்டியை சந்தித்து வரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், முன்கூட்டியே குறைந்த விலையில் ஆர்டர்களை பெற்றுள்ள நிலையில் தற்போதைய நூல் விலை உயர்வு தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றனர்.

கிலோவுக்கு 7 ரூபாய் உயர்வு என்பது சாதாரணமாக தெரிந்தாலும், டன் கணக்கில் நூல் வாங்கும் பெரிய நிறுவனங்களுக்கும், தினசரி கூலிக்கு உற்பத்தி செய்யும் சிறு நிறுவனங்களுக்கும் இது பல ஆயிரம் ரூபாய் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என பின்னலாடைத் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b