Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த துறைமுக ஒப்பந்த பணியாளர் பிரதீப் ராஜ், தனது வீட்டிற்கு அருகிலேயே கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னையில் இதுபோன்ற கொலைகள் அதிகரித்து வருவது அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளதுடன், உயிரிழந்த பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ராஜின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் பெற்றது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பகை இருந்து வந்ததாகவும், கடன் கொடுத்தவர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் பிரதீப் ராஜ் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு திருவொற்றியூர் காவல் நிலையம் மற்றும் துணை ஆணையரிடம் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மாறாக பிரதீப் ராஜையே பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரதீப் ராஜ் மீண்டும் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அப்போதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பிரதீப் ராஜ் ஊடகங்களிடம் குற்றஞ்சாட்டியதாகவும், அதற்கு அடுத்த நாளே அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதீப் ராஜ் அளித்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ள அன்புமணி, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்களுக்கு ஆதரவாக காவல் ஆய்வாளர் செயல்பட்டதே எதிரிகளுக்கு துணிச்சலை அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
உயிருக்கு பாதுகாப்பு கேட்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல், கொலை மிரட்டல் விடுப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் காவல்துறையின் கொள்கையா என கேள்வி எழுப்பியுள்ள அவர், கடமையை செய்யத் தவறிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சென்னையில் சில நாட்களுக்கு முன்பு ஆளும் தவெக நிர்வாகி உள்ளிட்ட இருவர் ஒரே நாளில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த பதற்றம் தணிவதற்குள் மற்றொரு கொலை நடந்துள்ளதாகவும் அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், “இதுதான் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் அழகா?” என கேள்வி எழுப்புவதாக தெரிவித்துள்ள அவர், சென்னையில் இனியும் இதுபோன்ற கொலைகள் நடைபெறாத வகையில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam