Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 10 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற மெகா டி.எஸ்.சி. ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விரைவில் திரட்டி மக்கள் முன் வெளியிடுவேன் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மெகா டி.எஸ்.சி. நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை மூடி மறைக்க மாநில அரசு தீவிரமாக முயற்சித்து வருவதாக ஜெகன் கூறினார்.
சட்டசபையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவும், கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேசும் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்ததாக அவர் விமர்சித்தார்.
கேள்வித்தாள் தயாரிப்பு மற்றும் தேர்வை நடத்தும் பொறுப்பை ஒரே நபருக்கோ அல்லது ஒரே நிறுவனத்துக்கோ எப்படி வழங்க முடியும் என்று கேள்வி எழுப்பிய ஜெகன், எஸ்.சி.இ.ஆர்.டி. துறையில் பணியாற்றும் நவீன் என்பவருக்கு முதல் ரேங்க் கிடைத்தது எப்படி என்றும், முதல் ரேங்க் பெற்ற அவருக்கு ஏன் பணி வழங்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அரசாணை எண் 4 மற்றும் 47-ஐ பிறப்பித்து விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டு விதிமுறைகளை ஏன் மாற்றினார்கள் என்றும் அவர் கேட்டார். தேர்வு நடத்தாமலேயே 372 பேருக்கு போலி சான்றிதழ்களின் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இதன் பின்னணி என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, ஜூடோ விளையாட்டு பிரிவில் மட்டும் 39 பேருக்கு முறைகேடாக சான்றிதழ்கள் தயாரித்து வேலை வழங்கப்பட்டுள்ளதாக ஜெகன் தெரிவித்தார்.
மெகா டி.எஸ்.சி. முறைகேடுகள் குறித்து தங்கள் கட்சி ஆதாரங்களுடன் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கோபமடைந்து வருவதாகவும் ஜெகன் விமர்சித்தார். அமைச்சர் நாரா லோகேசை காப்பாற்றுவதற்காக அரசு முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அரசின் நடவடிக்கைகளை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து அச்சுறுத்துவதாகவும் ஜெகன் குற்றம் சாட்டினார்.
டி.எஸ்.சி. முறைகேடு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் விரைவில் முழுமையாக மக்கள் முன் கொண்டு வருவேன் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA