Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 10 செப்டம்பர் (ஹி.ச.)
மணிக்கணக்கில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி காலத்தை வீணடிக்க வேண்டாம். களத்தில் முடிவுகள் வேண்டும்.
அதிகாரிகள் எதிர்வினையாற்றும் நிர்வாகத்தில் இருந்து முன்கூட்டியே செயல்படும் நிர்வாகத்துக்கு மாற வேண்டும்” என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
ஆந்திர மாநில தலைமைச் செயலகத்தில் 8-வது மாவட்ட கலெக்டர்கள் மாநாடு தொடங்கியது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார். மாநாட்டின் முதல் நாளில் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில்,
அற்புதமான திட்டங்களை வகுத்தாலும் அவற்றை செயல்படுத்தாவிட்டால் அவை நிறைவேறாத கனவுகளாகவே இருக்கும். கோப்புகள் நிலுவையில் இருந்தால் வளர்ச்சிப் பணிகளும் நிலுவையில் உள்ளதாகவே அர்த்தம். புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் மக்களுக்கு நீதி கிடைப்பதும் தாமதமாகிறது.
அரசை தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை வழங்கக்கூடாது. உண்மை நிலவரத்தை அதிகாரிகள் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும்.
பிரச்சினைகளை மறைத்தால் அவை பெரிதாகும். வெளிப்படையாக விவாதித்தால் தீர்வு காண முடியும்.
துறைகள், மாவட்டங்கள், செயலாளர்கள், கலெக்டர்கள் ஆகியோர் ஆரோக்கியமான போட்டியுடன் செயல்பட வேண்டும். ‘ஒரே மாநிலம், ஒரே தொலைநோக்கு, ஒரே குழு, ஒரே பணி’ என்ற அடிப்படையில் செயல்பட்டால் சுவர்ண ஆந்திரா இலக்கை அடைய முடியும்” என்றார்.
நீர்ப்பாசனத்துறையில் ஆந்திர அரசு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து நிதி மந்திரி பையாவுல கேசவ் பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடுவை ‘சி.இ.ஓ. முதல் வாட்டர்மேன் வரை’ என்று எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, “என்னை சி.இ.ஓ. முதல்-மந்திரி என்uறு அழைத்தபோதுகூட இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை.
மாநிலத்தின் வறட்சி பகுதிகளுக்கும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதில்தான் எனக்கு உண்மையான திருப்தி கிடைக்கிறது. நீர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அங்கீகரித்து ‘வாட்டர்மேன்’ என்று அழைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் நீர்ப்பாசனப் பணிகளை பாராட்டும் வகையில் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.
கடந்த 27 மாதங்களில் மாநிலத்தின் பொருளாதாரத்தை சீரமைத்துள்ளதாகவும், ரூ.1.40 லட்சம் கோடி நலத்திட்டங்களுக்கும், ரூ.1.50 லட்சம் கோடி வளர்ச்சிப் பணிகளுக்கும் செலவிடப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஹந்த்ரீ-நீவா, வெலிகொண்டா முதல்கட்ட பணிகள் மற்றும் போலவரம் இடதுபுற கால்வாய் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், போலவரம் திட்டத்தை 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்து நாட்டுக்கு அர்ப்பணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
“இந்த சாதனைகள் அனைத்தும் ஒருவரால் மட்டும் சாத்தியமானவை அல்ல. பிரதமர் மோடி, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோரின் ஒத்துழைப்புடன் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டதால் இந்த வெற்றி கிடைத்தது” என்றும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 முக்கிய திட்டங்களையும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 முதல் 15 முக்கிய திட்டங்களையும் கண்டறிந்து அவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். மாவட்டங்களில் வளர்ச்சிக்கான முக்கிய வாய்ப்புகளை கண்டறிந்து செல்வத்தை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘டீப் டெக்’ நிர்வாகத்தை செயல்படுத்தி, முடிவெடுக்கும் வேகத்தையும் அரசு சேவைகளின் தரத்தையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“சிலர் திட்டமிட்டு போலி தகவல்களை பரப்புகின்றனர். அவற்றை உடனடியாக கண்டறிந்து உண்மை தகவல்களுடன் முறியடிக்க வேண்டும்.
டி.எஸ்.சி.-2025 விவகாரத்தில் 2 பெண் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு உண்மை நிலவரத்தை மக்களிடம் எடுத்துச் சென்றனர். அவர்களை பாராட்டுகிறேன்” என்றார்.
எல்-நினோ தாக்கத்தால் மாநிலத்தில் 54 சதவீதம் மழைப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் வினியோகத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். நெருக்கடியான காலங்களில்தான் கலெக்டர்களின் தலைமைத்துவ திறன் வெளிப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2027-ம் ஆண்டுக்குள் ஆந்திராவை நிலத்தகராறுகள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், தற்போது 13.44 சதவீதமாக உள்ள மாநில வளர்ச்சி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயித்தார்.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர் சாய் பிரசாத், டி.ஜி.பி. ஹரீஷ் குமார் குப்தா மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA