Enter your Email Address to subscribe to our newsletters

காக்கிநாடா , 10 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் புலி நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், துணை முதல்-மந்திரியும், வனத்துறை மந்திரியுமான பவன் கல்யாண் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரத்திபாடு மண்டலம் தாரப்பள்ளி அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புலி நடமாடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து புலியின் நடமாட்டம், தற்போதைய நிலவரம் மற்றும் அதனை கண்காணித்து பிடிப்பதற்காக வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பவன் கல்யாண் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வனத்துறையினர் மற்றும் சிறப்பு ‘ஹனுமான்’ குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
புலி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மேலும், வனத்துறை, போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள விரைவு நடவடிக்கை குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் பவன் கல்யாண் உத்தரவிட்டார்.
வனப்பகுதியையொட்டியுள்ள கிராம மக்களை தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கச் செய்வதுடன், அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் புலிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நமது பொறுப்பு” என்று பவன் கல்யாண் தெரிவித்தார்.
புலியின் நடமாட்டம் தொடர்பான நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA