Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் (26). இவர் கந்து வட்டி பிரச்சனை தொடர்பான முன்விரோதம் காரணமாக நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த நாராயணன் என்ற நவீன் (32), ஹரிகிருஷ்ணன் (21), ஜபார் (24), லோகேஷ் (27) ஆகிய 4 பேரை திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் அலெக்ஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் இருந்து பட்டாக்கத்திகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் கொலைக்கான காரணம், சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam