Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லரான ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசின் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் தனியார் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே இந்த டெண்டர் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கருத்து தெரிவித்தது.
பொதுநலன் கருதி தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கான அடிப்படை தகுதிகளை இந்த மனு பூர்த்தி செய்யவில்லை என்றும், டெண்டர் வழங்கியதில் அரசு விதிமுறைகளை மீறியதற்கான முகாந்திரம் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து, பொற்கொல்லர் ராஜ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b