வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை வளாகத்தில் மனமகிழ் மன்றம் இயங்க இடைக்காலத் தடை - நீதிமன்றம் உத்தரவு
மதுரை, 10 செப்டம்பர் (ஹி.ச.) சிவகங்கை வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை வளாகத்திற்குள் மனமகிழ் மன்றம் செயல்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரண்மனை வளாகத்தில் மனம
Court orders interim stay on the operation of a recreation club


மதுரை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

சிவகங்கை வீரமங்கை வேலு நாச்சியார் அரண்மனை வளாகத்திற்குள் மனமகிழ் மன்றம் செயல்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரண்மனை வளாகத்தில் மனமகிழ் மன்றம் தொடர்ந்து செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த இடைக்காலத் தடை உத்தரவை முறையாக அமல்படுத்துவதை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தன. வீரமங்கை வேலு நாச்சியார் என்ற பெயரே அவரது வீரத்தையும், தீரத்தையும், ஆங்கிலேயரை எதிர்த்து அவர் நடத்திய முதல் சுதந்திரப் போராட்டத்தையும் நினைவுபடுத்தும் சின்னமாகும். அத்தகைய மாபெரும் வீரமங்கை வாழ்ந்து ஆட்சி செய்த அரண்மனை, உயர்ந்த ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்த புனிதமான அரண்மனை வளாகத்திற்குள்ளேயே மது அருந்தும் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்றும், வரலாற்று சிறப்புமிக்க வேலு நாச்சியார் அரண்மனையில் இதுபோன்ற மனமகிழ் மன்றத்திற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றும் நீதிமன்றம் வேதனையுடன் சுட்டிக்காட்டியது.

வீரத்தின் அடையாளமாக திகழ வேண்டிய அரண்மனை வளாகம், கேளிக்கை மன்றமாக மாறியிருப்பது வரலாற்றுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு என்றும், இந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b