Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ பி. சத்யாபாமா ஆகியோர் அதிமுக-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன.
இந்த இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணைய அட்டவணைப்படி, செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 16 வரை அதிகாரப்பூர்வ வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.
இதனை தொடர்ந்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விருப்ப மனு அளிப்பதற்கு இன்று கடைசி நாள் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்குள் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது விருப்ப மனுக்களை நேரில் வந்து தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காகவே இந்த விருப்ப மனு பெறும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.
பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, கட்சித் தலைமையின் ஆலோசனைக்குப் பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b