பாளையங்கோட்டை மத்திய சிறையில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் திடீர் ஆய்வு
திருநெல்வேலி, 10 செப்டம்பர் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தற்போது விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் ம
District Collector Anand Mohan conducts a surprise inspection at Palayamkottai Central Prison.


திருநெல்வேலி, 10 செப்டம்பர் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தற்போது விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, இதுகுறித்து உண்மை நிலையைக் கண்டறிய நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

அந்த உத்தரவின் அடிப்படையில், பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள், கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைகளின் நிலை, சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆட்சியர் விரிவாக ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வின் முடிவில், சிறையில் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள் மற்றும் முறைகேடுகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை மாவட்ட ஆட்சியர் தயாரிக்க உள்ளார்.

அவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கை நேரடியாக உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் நீதிமன்றம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b