Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 10 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை நடைபெறும் இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்வில், தமிழக அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.
திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் மரியாதை செலுத்த உள்ளனர்.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சட்டம்-ஒழுங்கு ADGP அன்பு மற்றும் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தலைமையில், 6 டிஐஜிக்கள், 33 எஸ்பிக்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் போலீசார் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ள மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகளாக 938 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 38 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இம்மானுவேல் சேகரன் நினைவிடம், பரமக்குடி பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தைத் திடல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நிலையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 44 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 67 இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 700 நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிசிடிவி மற்றும் டிரோன் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, பரமக்குடி நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P