பெண்ணின் வீட்டுக்குள் இரவில் நுழைந்து ஆடையை அகற்ற முயன்றது மட்டும் பாலியல் பலாத்கார முயற்சி அல்ல - ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்
ஜார்க்கண்ட், 10 செப்டம்பர் (ஹி.ச.) பெண்ணின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, அவரது ஆடையை அகற்ற முயன்றது மட்டும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி (IPC) பாலியல் பலாத்காரம் அல்லது அதற்கான முயற்சியாகக் கருத முடியாது என ஜார்க்கண்ட் உயர்நீதி
ஜார்க்கண்ட் நீதிமன்றம்


ஜார்க்கண்ட், 10 செப்டம்பர் (ஹி.ச.)

பெண்ணின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, அவரது ஆடையை அகற்ற முயன்றது மட்டும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி (IPC) பாலியல் பலாத்காரம் அல்லது அதற்கான முயற்சியாகக் கருத முடியாது என ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1999ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பெண்ணின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் நுழைந்த ஒருவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மேல்முறையீட்டு விசாரணையில், நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவத்சவா, பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை ஆய்வு செய்தபோது, பாலியல் பலாத்காரத்தை மேற்கொள்ளும் நோக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்ட வகையில் நேரடியாக செயல்பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லை எனக் குறிப்பிட்டார்.

பாலியல் பலாத்கார முயற்சி எனக் கருதப்படுவதற்கு, அந்தக் குற்றத்தைச் செய்வதற்கான திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் குறிப்பிட்ட நேரடி செயல் (overt act) மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.

அதேவேளையில், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் ஆபாசமானதும், பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலும் இருந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது. இதனால், பாலியல் பலாத்கார முயற்சி என்ற குற்றச்சாட்டை மாற்றி, பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கில் குற்றவியல் வலிமையைப் பயன்படுத்தியதாக வழக்கின் குற்றச்சாட்டை மாற்றி அமைத்தது.

இதையடுத்து, மேல்முறையீட்டாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நீதிமன்றம் மாற்றியமைத்தது. விசாரணைக் காலத்திலேயே அவர் ஏற்கனவே சுமார் 8 மாதங்கள் சிறையில் இருந்ததால், அது நீதியின் நோக்கத்தை நிறைவேற்ற போதுமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்மூலம், ஒரு பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது ஆடையை அகற்ற முயன்றது மட்டும், அந்தச் செயல் பாலியல் பலாத்காரத்தை மேற்கொள்ளும் தெளிவான நேரடி முயற்சியாக நிரூபிக்கப்படாத நிலையில், IPC-யின் கீழ் பாலியல் பலாத்கார முயற்சியாகக் கருத முடியாது என்பதை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P