கொலைகளை வேடிக்கை பார்த்துவிட்டு கதாநாயக சாகசம் காட்ட முதல்வர் திட்டமிடுகிறாரா? - கனிமொழி கடும் விமர்சனம்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜின் தாய், ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்துள்ளார். இதில் சிலர் பணம் செலுத்தத் தவறியதால், கடன் கொடுத்த கந்துவட்டி கும்பல் பிரதீப் ராஜ் மற்றும் அவ
கொலைகளை வேடிக்கை பார்த்துவிட்டு கதாநாயக சாகசம் காட்ட முதல்வர் திட்டமிடுகிறாரா? - கனிமொழி கடும் விமர்சனம்


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜின் தாய், ஒருவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்துள்ளார். இதில் சிலர் பணம் செலுத்தத் தவறியதால், கடன் கொடுத்த கந்துவட்டி கும்பல் பிரதீப் ராஜ் மற்றும் அவரது தாயை மிரட்டி வந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதீப் ராஜ், கந்துவட்டி ரவுடிகளுக்கு ஆதரவாகத் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் செயல்படுவதாகவும், தன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அந்த ஆய்வாளர் தம்மைக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குடும்பத்துடன் பாதுகாப்பு கோரிப் புகாரளித்தார்.

இந்த ஊடகப் பேட்டி மற்றும் புகாருக்கு அடுத்த நாளே, பிரதீப் ராஜ் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் பின்தொடரப்பட்டு, ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது ‘கதாநாயக சாகசங்களை’ காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பமும் மக்களிடையே எழுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b