Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 10 செப்டம்பர் (ஹி.ச)
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தறித்தொழிலாளி மாதையன் (39) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
எர்ணாபுரத்தைச் சேர்ந்த மாதையன், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் 34 வயது பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணின் வீட்டிற்கு மாதையன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி கடந்த 3 வாரங்களாக பள்ளிக்கு செ ல்லாததால் அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது, மாதையன் கடந்த 4 மாதங்களாக தன்னிடம் தவறாக பேசி வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து வெளியில் தெரிவித்தால் தனது தாயை கொலை செய்து விடுவதாக மாதையன் மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாதையனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ