மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
விழுப்புரம், 10 செப்டம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோருக்கு சாப விமோசனம் வழங்கிய ஸ்தலமாகவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளை
Melmalayanur


விழுப்புரம், 10 செப்டம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோருக்கு சாப விமோசனம் வழங்கிய ஸ்தலமாகவும், பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகளை அழிக்கும் ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

அங்காளம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது இங்கு சிறப்பு அம்சமாகும்.

இத்தகைய சிறப்புகளை உடைய மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையை தினத்தன்று சிறப்பு வழிபாடும், அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவ விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதன்படி, ஆவணி மாத அமாவாசை தினமான இன்று அங்காளம்மனுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு சேலை உடுத்தி, ஆபரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கணேச ஜனனி சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பல்வேறு இடங்களில் இருந்தும் மேல்மலையனூருக்கு வந்துள்ள ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அங்காளம்மனை தரிசனம் செய்து வழிபாடு நடத்தி விட்டு சென்ற வண்ணம் உள்ளனர்.

இன்று நள்ளிரவு நடைபெற உள்ள ஊஞ்சல் உற்சவ விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Hindusthan Samachar / ANANDHAN