திருவொற்றியூர் கொலை விவகாரம் - தமிழக அரசுக்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) “உன்னை வெட்டி திருச்செந்தூரில் கரைத்துவிடுவேன்” என மிரட்டல் – புகார் அளித்த அடுத்த நாளே பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத
Neelam


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

“உன்னை வெட்டி திருச்செந்தூரில் கரைத்துவிடுவேன்” என மிரட்டல் – புகார் அளித்த அடுத்த நாளே பிரதீப் ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில்,

சென்னை தலைநகரில் திருவொற்றியூர் பகுதியில் பிரதீப் ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரதீப் ராஜ்,காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னை “உன்னை வெட்டி திருச்செந்தூரில் கரைத்துவிடுவேன்”என மிரட்டியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சியளிக்கும் வகையில், அந்தப் புகார் அளித்ததாகக் கூறப்படும் அடுத்த நாளே பிரதீப் ராஜ் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், உயிரிழப்பதற்கு முன்பு பிரதீப் ராஜ் அளித்ததாகக் கூறப்படும் பேட்டியிலும், தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“என் மகனின் உயிரிழப்புக்கு இந்த நபர்தான் காரணம்” என பிரதீப் ராஜின் தாய் காவல் அதிகாரி மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு முன்வைத்திருப்பது இந்த விவகாரத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கிறது.

மக்களின் உயிரையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டு எழுந்திருப்பது மிகவும் கவலைக்குரியது.

காவல்துறையிடம் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த ஒருவரை ஏன் பாதுகாக்கவில்லை? பிரதீப் ராஜ் அளித்ததாகக் கூறப்படும் புகார் எப்போது பெறப்பட்டது? அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?அவருக்கு பாதுகாப்பு ஏன் வழங்கப்படவில்லை?

புகார் அளித்த மறுநாளே நடைபெற்ற கொலைக்கும், முன்பாக தெரிவிக்கப்பட்ட மிரட்டலுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கேள்விகளுக்கு தமிழக காவல்துறையும் தமிழக அரசும் தெளிவான பதில் அளிக்க வேண்டும்.

காவல் அதிகாரி மீது நேரடியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதே காவல்துறை அமைப்புக்குள் மட்டும் விசாரணையை நடத்துவது சந்தேகங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, சுயாதீனமான, வெளிப்படையான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

பிரதீப் ராஜ் அளித்ததாகக் கூறப்படும் புகார், அவர் அளித்த பேட்டி, தொலைபேசி அழைப்புப் பதிவுகள் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டு முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.

பிரதீப் ராஜின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பும், சட்ட உதவியும் வழங்கப்பட வேண்டும். கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்

காவல்துறையே சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.

அதிகாரத்தின் பெயரில் மிரட்டலுக்கும் அத்துமீறலுக்கும் இடமில்லை.

பிரதீப் ராஜின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும்!

அவர் அளித்ததாகக் கூறப்படும் புகார் குறித்தும் காவல் ஆய்வாளர் மீதான குற்றச்சாட்டுக்கு சுயாதீன விசாரணை வேண்டும்

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று பதிவிடப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN