Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாகவும், இதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
சென்னையில் இருந்து வரும் 11-ம் தேதி இரவு புறப்படும் ஆம்னி பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.3,999 வரையிலும், மதுரைக்கு ரூ.4,000 வரையிலும், கோவைக்கு ரூ.6,154 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், 14-ம் தேதி இரவு சென்னைக்கு திரும்பும் பயணிகளிடம் திருச்சியில் இருந்து ரூ.4,499, மதுரையில் இருந்து ரூ.4,899, கோவையில் இருந்து ரூ.4,799 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், கும்பகோணத்திற்கு ரூ.3,179 வரையிலும், அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.3,419 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டணத்தில் 4 பேர் கொண்ட குடும்பம் திருச்சிக்கு சென்று திரும்புவதற்கு சுமார் ரூ.34 ஆயிரம் வரை செலவாகும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலும், தமிழக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் இருந்ததைவிட தற்போது 20 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், “இது தான் தவெக ஆட்சியில் ஏற்பட்ட மாற்றமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த கட்டண நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவுகளை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam