பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு ஆணவத்தின் வெளிப்பாடு – பா.ஜ.க
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெ
நாராயணன் திருப்பதி


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு எடுத்துள்ள முடிவுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பட்டினப்பாக்கத்தில் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவு ஆளுமையின் வெளிப்பாடு அல்ல என்றும், அகம்பாவம் மற்றும் ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.

பட்டினப்பாக்கம் பகுதி மீனவ மக்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்த பகுதி என்றும், அங்கு உயர் பாதுகாப்பு கொண்ட அரசு வளாகம் அமைக்கப்படுவதால் மீனவர்களின் கடற்கரை பயன்பாடு மற்றும் சிறு படகு மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவை தொடர்பாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட்டினப்பாக்கம், சாந்தோம் நெடுஞ்சாலை, கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நிலையில், தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் தென் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மேலும், கடல் மட்ட உயர்வு மற்றும் கடல் அலைகளால் பாதிக்கப்படக்கூடிய கடற்கரைப் பகுதியில் தலைமைச் செயலகம் அமைப்பது எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், ரூ.1,200 கோடி செலவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தவறான முடிவு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழகத்திற்கு நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் தேவை என்பதை பாஜக எதிர்க்கவில்லை என்றும், ஆனால் இடத் தேர்வு மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, பட்டினப்பாக்கம் தொடர்பான அரசாணையை திரும்பப் பெற்று, திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல், போக்குவரத்து உள்ளிட்ட ஆய்வு விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும், மீனவ மக்களின் கருத்துகளை கேட்டறிந்து மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam