Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் பழங்குடியினர் (இருளர்) காலனியைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தார்ப்பாய் கொட்டகையில் வசித்து வந்த தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, அவரும் அவரது கணவர் ஆனந்தனும் விறகு வியாபாரி ஆறுமுகத்திடம் பெற்றிருந்த ரூ.20 ஆயிரம் முன்பணக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படும் செயல் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்குகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் தடுத்ததாகக் கூறப்படும் இந்தக் கொடூரமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டை விறகு வியாபாரி ஆறுமுகம் வழங்க வேண்டும் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தேன்மொழி மற்றும் அவரது பச்சிளம் குழந்தையின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ