Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 10 செப்டம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக இன்று தொடங்கியது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் என்.ரங்கசாமி, மங்கலம் தொகுதியிலும் வெற்றி பெற்றதால், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காலியான தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் திமுக சார்பில் சேது என்கிற சேது செல்வம் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். 55 வயதான சேது செல்வம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 3,984 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து இன்று புதுப்பேட்டை பகுதியில் உள்ள புத்துளாய் மாரியம்மன் திருக்கோயிலில் திமுக நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை தொடங்கினர். புதுச்சேரி திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., மாநில அமைப்பாளர் ஆர்.சிவா, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். துண்டுப் பிரசுரங்கள் வழங்காமல், நேரடியாக மக்களை சந்தித்து வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், செப்டம்பர் 16-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளன. அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam