Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 10 செப்டம்பர் (ஹி.ச.)
காங்கிரஸ் கட்சி போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி எதிர்க்கட்சிகள் மீது மோசமான தாக்குதலை நடத்தி வருவதாக பி.ஆர்.எஸ். கட்சியின் முன்னாள் மந்திரி ஹரீஷ் ராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்படும் போலி சமூக வலைதள கணக்குகளில் வெளியிடப்படும் பதிவுகளை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையில் மேற்கோள் காட்டி பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.
தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘சந்தியா ராவ்’ என்ற போலி கணக்கின் பின்னணியிலும் காங்கிரஸ் கட்சியினரே உள்ளனர்.
அந்த போலி கணக்கில் வெளியான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சட்டசபையை தவறாக வழிநடத்தியுள்ளார். எனவே, இதற்காக அவர் சட்டசபையிலும், பொதுமக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
‘சந்தியா ராவ்’ போலி கணக்கின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, அவர்களை கைது செய்ய வேண்டும். சட்டசபையை தவறாக வழிநடத்திய விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மீது சபை உரிமை மீறல் நோட்டீஸ் வழங்குவோம்.
மேலும், போலி கணக்குகள் மற்றும் அவதூறு தொடர்பாக போலீசில் அதிகாரபூர்வமாக புகார் அளிக்கப்படும்.
இவ்வாறு ஹரீஷ் ராவ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA