தாராபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.2.45 லட்சம் பறிமுதல்
திருப்பூர், 10 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்
பணம்


திருப்பூர், 10 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டப்பேரவைத் தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தாராபுரம்–உடுமலைப்பேட்டை சாலையில் தனியார் பள்ளி அருகே நேற்று காலை சுமார் 8 மணியளவில் குண்டடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர் தலைமையில், பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது உடுமலைப்பேட்டை சிவசக்தி காலனியைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி தங்கவேல் (65) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார். அவரது காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டபோது, காரின் மறைவான பகுதியில் ரொக்கப் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்தப் பணம் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் என்பது தெரியவந்தது. பணத்தை எடுத்துச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், பறக்கும் படையினர் ரூ.2.45 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாராபுரம் தேர்தல் துணை அலுவலரும், தாசில்தாருமான ராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு, தொடர்ந்து தாராபுரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

இடைத்தேர்தலை முன்னிட்டு தாராபுரம் தொகுதியில் முக்கிய சாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam