திருத்துறைப்பூண்டி அருகே கருப்பு நிறத்தில் வரும் குடிநீர் – பொதுமக்கள் அச்சம்
திருவாரூர், 10 செப்டம்பர் (ஹி.ச.) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு ரொக்ககுத்தகை பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர்
குடிநீர்


திருவாரூர், 10 செப்டம்பர் (ஹி.ச.)

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு ரொக்ககுத்தகை பகுதியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் சீராக இல்லாததால், அப்பகுதி மக்கள் பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி குடிநீர் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது வீடுகளுக்கு வரும் குடிநீர் கருமை நிறத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குடிநீரை கொதிக்க வைத்தாலும் அதன் கருமை நிறம் மாறவில்லை என்றும், இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் தவிர்த்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கருமை நிறத்தில் வரும் குடிநீரை பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதையடுத்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, குடிநீர் கருமை நிறத்தில் வருவதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முறையாக பராமரிக்கப்படுகிறதா, குடிநீர் விநியோகக் குழாய்களில் ஏதேனும் அசுத்தம் கலந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பான, தரமான குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam