Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச)
தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறியிருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கடன் தொல்லை தொடர்பாக பாதுகாப்பு கோரிய பிரதீப்ராஜ் என்ற இளைஞர், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டியதாக கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், உயிரோடு இருக்க மாட்டாய் என்றும், பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பேன் என்றும் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக பிரதீப்ராஜ் தெரிவித்திருந்ததாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, முதலமைச்சரிடம் வேண்டுமானால் சென்று சொல்லிக்கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் கூறியதாக பிரதீப்ராஜ் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை காவல்துறையினரே மதிக்காமல் செயல்படுகிறார்களா என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பும்போது, கடந்த கால சம்பவங்கள் மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்து பேசி விவாதத்தை திசைதிருப்புவதாக முதலமைச்சர் மீது குற்றம்சாட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், இந்த கொலை சம்பவத்திற்கு முதலமைச்சர் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தலைநகர் சென்னையில் இதுபோன்ற கொலைச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ