வாணியம்பாடியில் ஆடுகளை திருட ஆட்டோவில் வந்த 2 பேர் பொது மக்களிடம் சிக்கினர் – ஆட்டோ பறிமுதல்!
திருப்பத்தூர், 10 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள ஆடுகள் தொடர்ந்து திருடு போவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், ஆடுகளை திருட வந்ததாக கூறப்படும் இரண்டு பேரை பொதுமக்கள்
திருட்டு முயற்சி


திருப்பத்தூர், 10 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள ஆடுகள் தொடர்ந்து திருடு போவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், ஆடுகளை திருட வந்ததாக கூறப்படும் இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் உள்ள பாலாறு கிளை ஆற்றில் ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள், அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை நோட்டமிட்டு சுற்றி வந்துள்ளனர்.

ஏற்கனவே ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆட்டோ எண்ணை அறிந்திருந்த ஆடு உரிமையாளர், அதே எண்ணுடைய ஆட்டோ அப்பகுதியில் சுற்றி வருவதை கண்டு சந்தேகமடைந்துள்ளார்.

இதையடுத்து பொதுமக்களின் உதவியுடன் ஆட்டோவை சுற்றி வளைத்த அவர், அதில் இருந்த இரண்டு பேரையும் பிடித்து நகர போலீசாரிடம் ஒப்படைத்தார். அப்போது பொதுமக்கள் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

விசாரணையில், பிடிபட்டவர்கள் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்த மதன்குமார்(32), மற்றும் வசந்த்(23), என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை திருட பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்து பிடிபட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam