திருமாவளவனை மட்டும் குறிவைத்து அறிவுரை வழங்குவதா? – விசிக பொருளாளர் பாலாஜி கண்டனம்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) முதலமைச்சர் விஜய் 7ஆம் தேதியும், சட்ட அமைச்சர் நிர்மல் குமார் 8ஆம் தேதியும் சட்டமன்றத்தில் பேசிய விவகாரம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் அவதூறு பர
Ss balaji


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

முதலமைச்சர் விஜய் 7ஆம் தேதியும், சட்ட அமைச்சர் நிர்மல் குமார் 8ஆம் தேதியும் சட்டமன்றத்தில் பேசிய விவகாரம் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாக அக்கட்சியின் பொருளாளர் பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

8ஆம் தேதி விபத்தில் உயிரிழந்த கட்சியின் முன்னணி பொறுப்பாளர் புதுவை பொன் சிவந்தவனுக்கு திருமாவளவன் அஞ்சலி செலுத்தியதாகவும், பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அதிகாலையில்தான் சென்னை திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வேறு நபர்களை வைத்து அறிக்கைகளை பதிவு செய்பவர் திருமாவளவன் அல்ல என்றும், அவரே எழுதி, பதிவு செய்வது வழக்கம் என்றும் பாலாஜி தெரிவித்துள்ளார். மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் உடனடியாகவும், மற்ற விவகாரங்களில் அதன் தன்மைக்கேற்பவும் நேரம் எடுத்துக்கொண்டு கருத்து தெரிவிப்பது அவரது வழக்கம் எனவும் கூறியுள்ளார்.

அதன்படியே, சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 9ஆம் தேதி திருமாவளவன் தனது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததாக பாலாஜி தெரிவித்துள்ளார். திருமாவளவனின் அறிக்கைக்குப் பிறகே ஆசிரியர் கி.வீரமணி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இதுதொடர்பாக எதிர்வினையாற்றியுள்ளதாகவும், அப்படியிருக்க அவர்களின் கருத்துகள் காலதாமதமானவை இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கூட்டணி கட்சிகளின் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே திருமாவளவன் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது அவரது துணிவுக்கும் நேர்மைக்கும் சான்றாகும் என தெரிவித்துள்ளார்.

திருமாவளவனை மட்டும் குறிவைத்து, அவர் எப்போது கருத்து தெரிவிக்க வேண்டும், எப்போது அறிக்கை வெளியிட வேண்டும், அதில் என்னென்ன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கும் மேலாதிக்கப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் விசிக பொருளாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P