Enter your Email Address to subscribe to our newsletters

நாகை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
கீழை நாடுகளின் லூர்து என்று போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் பேராலயம் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் மேதகு சகாயராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுவரை காலை முதல் இரவு வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பக்தர்களுக்காக திறக்கப்பட்டு வந்த பேராலயம், இனி இரவு பகல் பாராமல் எந்த நேரத்திலும் இறைவேண்டல் செய்வதற்கு ஏதுவாக திறந்திருக்கும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நீண்ட தூர பயணம் மேற்கொண்டு வரும் பக்தர்கள், நள்ளிரவில் வந்தாலும் காத்திருக்காமல் உடனடியாக அன்னையின் தரிசனம் பெற்று மன அமைதி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆயர் தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறையின் மூலம் பக்தர்களின் வசதி பெருமளவில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாதயாத்திரையாக வருபவர்கள், இரவு நேரங்களில் வேளாங்கண்ணியை வந்தடைபவர்கள், எந்தவித தடையுமின்றி ஆலயத்திற்குள் சென்று ஜெபிக்கலாம்.
இதற்காக பேராலய நிர்வாகம் சார்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வெளிச்ச வசதிகள், தன்னார்வலர்கள் பணி மற்றும் 24 மணி நேரமும் தொடர் திருப்பலிகள், ஜெப வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தஞ்சை மறைமாவட்ட ஆயரின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆரோக்கிய அன்னையின் அருளை நாடி வரும் அனைத்து பிள்ளைகளுக்கும் ஆலயத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பது நம்பிக்கையின் புதிய அடையாளமாக கருதப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b