திருவொற்றியூர் இளைஞர் கொலை - காவல்துறையின் செயல்பாடு குறித்து வானதி சீனிவாசன் கேள்வி
தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை திருவொற்றியூரில் கந்துவட்டி தகராறில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என காவல்துறையில் புகார் அளித்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத
வானதி


தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை திருவொற்றியூரில் கந்துவட்டி தகராறில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என காவல்துறையில் புகார் அளித்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

உயிருக்கு பாதுகாப்பு கோரி புகார் அளித்தும் அதனை காவல்துறை அலட்சியமாகக் கருதியதன் விளைவாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞர் காவல் ஆய்வாளர் மீதும் குற்றச்சாட்டு தெரிவித்திருந்ததாக கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும், தினந்தோறும் ரவுடிகளின் அட்டகாசமும் ஆயுதக் கலாச்சாரமும் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய், தற்போதைய சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து பதிலளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், மக்கள் பிரச்சினைகளை விடுத்து 50 ஆண்டுகால பழங்கதைகளை பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

“முன்பிருந்த ஆட்சியை விட தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு இன்னும் படுபாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல; முற்றிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது” என வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P