Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 11 செப்டம்பர் (ஹி.ச)
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள டி.டி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் இரண்டு வயது மகள் கௌரவி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் வீடு முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது. இந்த சூழலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டில் திறந்து வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.
சிறிது நேரம் கழித்து குழந்தையை காணவில்லை என பெற்றோர் தேடியபோது, தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை மிதந்தது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கு அடிக்கடி ஏற்படும் மின்வெட்டே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்வெட்டு நேரத்தில் ஏற்பட்ட இருளால் தான் குழந்தை தொட்டியில் விழுந்ததாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b