நிர்வாகத்தில் வேகம் வேண்டும் - முதல்வர் சந்திரபாபு நாயுடு
அமராவதி , 11 செப்டம்பர் (ஹி.ச.) அரசு கோப்புகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், நிர்வாகத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அமராவதி
A


அமராவதி , 11 செப்டம்பர் (ஹி.ச.)

அரசு கோப்புகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், நிர்வாகத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

அமராவதியில் நடைபெற்ற 8-வது மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர்,

மந்திரிகள், அரசு செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் என அனைவரும் கோப்புகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 2 நாட்களுக்குள் கோப்புகளை முடித்த அதிகாரிகளை பாராட்டிய சந்திரபாபு, சில கோப்புகளை சில மணி நேரங்களிலேயே முடித்த அதிகாரிகளின் செயல்பாட்டையும் குறிப்பிட்டு பாராட்டினார்.

அதேவேளையில், கோப்புகளை தேவையின்றி தாமதப்படுத்தும் அதிகாரிகளின் செயல்பாட்டுக்கு அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.

நிர்வாகத்தில் பொறுப்புணர்வும், அதிகாரிகளின் செயல்திறனும் மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணித்திறன் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று 360 டிகிரி செயல்திறன் அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் சில உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளாததற்கும் சந்திரபாபு அதிருப்தி தெரிவித்தார். அவர்கள் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்று தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

அரசின் அனைத்து துறைகளிலும் கோப்புகளை கையாளும் முறையை நவீனப்படுத்தும் வகையில், ஒரு மாதத்துக்குள் அனைத்து அரசு கோப்புகளையும் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்ற வேண்டும் என்று சந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பிறகு காகித கோப்புகள் மூலம் பணிகளை மேற்கொள்வது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.

இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் அலுவலகங்களில் மட்டுமே இருந்து செயல்படாமல், களப்பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் சந்திரபாபு அறிவுறுத்தினார். அரசு செயலாளர்கள், கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடிக்கடி கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிய வேண்டும் என்று அவர் கூறினார்.

மாவட்ட அளவில் கலெக்டர்களும், தொகுதி அளவில் எம்.எல்.ஏ.க்களும், மண்டல அளவில் அதிகாரிகளும் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்தால் பல பிரச்சினைகளை அங்கேயே தீர்க்க முடியும் என்றும், இனிமேல் அதிகாரிகளின் களப்பயண விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சந்திரபாபு தெரிவித்தார்.

மக்கள் குறைதீர்க்கும் மேடை மூலம் பெறப்படும் மனுக்களுக்கு மக்கள் திருப்தி அடையும் வகையில் தீர்வு காண வேண்டும் என்றும் கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறப்பாக செயல்படாதவர்களை ஒதுக்கிவிட்டு திறமையாக பணியாற்றுபவர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் சந்திரபாபு கூறினார்.

மேலும், கிராமம் மற்றும் வார்டு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச்சுமையை சீரமைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ஒரே ஊழியருக்கு அதிக பணிச்சுமை ஏற்படாத வகையில் அனைவருக்கும் சமமான பொறுப்புகளை வழங்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கிராம அலுவலக ஊழியரின் பணிகளை தெளிவுபடுத்தும் வகையில் ‘ஜாப் சார்ட்’ தயாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஒவ்வொரு கிராமம் மற்றும் வார்டு அலுவலகத்துக்கும் ஒரு மின்சார சைக்கிள் வழங்கவும் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA