Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச)
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி என்ற முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
வங்கித் துறையில் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மற்ற துறைகளைப் போல வங்கி ஊழியர்களுக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி, வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை என்ற முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், வங்கி ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் வழங்குவதில் நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும், அதனை கைவிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் சமமான முறையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b