Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
சமூக சீர்திருத்தவாதியும், தீவிர காந்தியவாதியும், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவருமான டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.
அதில்
சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமல்லாமல், சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கான சம உரிமை ஆகியவற்றுக்காகத் தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர் டாக்டர் சுப்பராயன்.
தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய அவர், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு, தான் நம்பிய சமூக சீர்திருத்தக் கொள்கைகளைத் தனது வாழ்க்கையிலேயே நடைமுறைப்படுத்தியவர்.
சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது, ஆலய நுழைவு சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும், பட்டியலின மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் முக்கியப் பங்காற்றினார்.
அரசியலமைப்புச் சட்ட நிர்ணய சபை உறுப்பினராகவும், மொழி ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தபோது, இந்தியைத் திணிப்பதை உறுதியாக எதிர்த்தவர்.
பலரும் அறியாத வரலாற்றுச் செய்தி:
1929 பிப்ரவரியில் செங்கல்பட்டில் பெரியார் அவர்கள் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளை டாக்டர் சுப்பராயன் அவர்கள் தொடங்கி வைத்தார்; பி.டி. ராஜன் அவர்கள் கொடியை ஏற்றினார்.
ஆளுநர், தூதர், அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியவர்.
வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது உறுதியான பற்றுடன் இருந்து, அரசியலைத் தாண்டி சமூக மாற்றத்திற்காக உழைத்த டாக்டர் பி. சுப்பராயன் அவர்களின் வாழ்க்கையும் பணியும் இன்றும் நமக்கு வழிகாட்டுகின்றன.
சமூக நீதி, சமத்துவம், சீர்திருத்தம் என்ற அவரது இலட்சியங்களைப் போற்றுவோம்.
டாக்டர் பி. சுப்பராயன் அவர்களுக்கு பிறந்தநாள் மரியாதை என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN