பிள்ளையார் சிலை விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட மறுப்பு - மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச) விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலைகள் வைப்பது, ஊர்வலம் நடத்துவது மற்றும் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை தமிழக அரச
Court refuses to issue orders to the government


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச)

விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலைகள் வைப்பது, ஊர்வலம் நடத்துவது மற்றும் நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என்றும், எனவே அந்த விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளையும், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளையும் தமிழக அரசு கடைபிடிக்காது என எப்படி முன்கூட்டியே கூற முடியும் என கேள்வி எழுப்பினர்.

மேலும், இது தொடர்பாக ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், அங்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவைப்பட்டால் மனுதாரர் தரப்பினர் நேரடியாக பசுமை தீர்ப்பாயத்தை அணுகிக் கொள்ளலாம் என்றும் அறிவுரை வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Hindusthan Samachar / vidya.b