Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் காலியாகவுள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடத்தப்படவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதியில் இ.பரந்தாமன் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதியில் எஸ்.சுகன்யா போட்டியிட உள்ளனர்.
பரந்தாமன் திமுகவின் சட்டத்துறை இணைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறார்.
மூத்த வழக்கறிஞரான இவர், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
தற்போது 2-வது முறையாக அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுகன்யாவும் வழக்கறிஞர். திமுகவில் மகளிரணி நிர்வாகியான இவருக்கு, இம்முறை தாராபுரம் தொகுதியில் போட்டியிட தலைமை வாய்ப்பு அளித் துள்ளது.
அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 15-ம் தேதி தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
இதன்படி மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் சுகன்யாவும் அன்றைய தினம் தங்களது தொகுதிகளுக்கு உட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பெருமளவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 16-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, கடைசி நாளுக்கு முன்னதாகவே திமுக வேட்பாளர்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b