பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் நினைவிடத்தில் அரசு சார்பில் மரியாதை - அமைச்சர்கள், த.வெ.க எம்.எல்.-ஏக்கள் அஞ்சலி
பரமக்குடி, 11 செப்டம்பர் (ஹி.ச.) ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்க
Government pays tribute at the memorial of Immanuel Sekaranar in Paramakudi


பரமக்குடி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது நினைவிடத்தில் அரசு விழாவாக அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், அருண்ராஜ், பிரபு, விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அமைச்சர்கள் மதன் ராஜா, ராஜீவ் ஆகியோரும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் நினைவிடத்தில் திரண்டு மரியாதை செலுத்தினர்.

நினைவு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தவும் பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b