Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 11 செப்டம்பர் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த மந்தி கிருஷ்ணாபுரத்தில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டப்பட்டு வரும் நிலையில், அதன் முதல் தளம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 6 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
இந்த விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ஜான்,39, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இமானுவேல்,45, சாமுவேல்,45, ஆகியோர் மருத்துவனை செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3ஆக பதிவானது.
கட்டட இடிபாடிகளில் சிக்கிய எஞ்சியவர்கள் மீட்கப்பட்டு, வேலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக திருவலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்த கட்டடத்தின் ஒப்பந்ததாரரான டேவிட் மோகன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b