தியாகி இம்மானுவேல் சேகரனாரின் போராட்டத்தையும் தியாகத்தையும் நினைவு கூர்வோம் - கனிமொழி எம்.பி.
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர் கிராமத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இம்மானுவேல் சேகரன், இளம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றியவர். ராணுவப் பணியில் இருந்து திரும்பிய ப
martyr Immanuel Sekaranar – Kanimozhi MP


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள செல்லூர் கிராமத்தில் 1924-ம் ஆண்டு பிறந்த இம்மானுவேல் சேகரன், இளம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவையாற்றியவர்.

ராணுவப் பணியில் இருந்து திரும்பிய பின்னர், தென் தமிழகத்தில் தலைவிரித்தாடிய தீண்டாமை, இரட்டைக் குவளை முறை, சாதிய அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்தார்.

அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த அவர், 1957-ம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை நடத்தி சமூகநீதிக்கான குரலை வலுவாக எழுப்பினார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சம உரிமை மற்றும் சுயமரியாதைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால் சாதிய வெறியர்களின் கோபத்திற்கு ஆளானார். 1957-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி பரமக்குடியில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது சதிகாரர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மறைந்தாலும் அவர் ஏற்றிய சமத்துவச் சுடர் இன்றும் தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்திற்கு வழிகாட்டியாக திகழ்கிறது.

பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி கனிமொழி எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டிருப்பதாவது,

சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.

அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b