Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 11 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரண்டு, காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறுகையில், கரூர் மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகவும், ஆனால் தங்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.750 ஊதியம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என்பது அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
மேலும், தொழிலாளர்கள் விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்வது, குப்பையின் எடை அளவை நிர்ணயமின்றி அதிகரிப்பது, தீபாவளி போனஸ் வழங்காதது, போராட்டம் நடத்தினால் பணி நீக்கம் செய்வது போன்ற தொழிலாளர் விரோதப் போக்கை தனியார் ஒப்பந்த நிறுவனம் கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தங்களது முக்கிய கோரிக்கையாக, ஒப்பந்த முறையை முற்றிலுமாக ஒழித்து, மாநகராட்சி நேரடியாக சம்பளம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விடுமுறை கால ஊதிய பிடித்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் மூன்றாவது நாளை கடந்து ஐந்தாவது நாளாக தொடர்வதால், நகரம் முழுவதும் தூய்மைப் பணிகள் முடங்கியுள்ளன. இதற்கிடையே, போராடும் தூய்மைப் பணியாளர்களுடன் பல்வேறு அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், தங்களது கோரிக்கைகளுக்கு முதல்வர் தலையிட்டு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றும், தேவைப்பட்டால் 100 நாட்கள் கூட போராடத் தயார் என்றும் தூய்மைப் பணியாளர்கள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b