Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் மேற்கூரைகளில் பொதுமக்கள் ஏறுவதற்கு மதுரை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி உள்ளிட்ட மூன்று அடுக்கு வீதிகளில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகளில் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, மின்சார கம்பிகளின் வழித்தடம் மற்றும் கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி மூல மற்றும் மாசி வீதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ள நிலையில், கும்பாபிஷேக நாளில் மேற்கூரைகளில் பொதுமக்கள் திரள்வதைத் தடுக்க மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam