Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ் இலக்கியத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய மகாகவி பாரதியாரின் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் சரத்குமார், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்களுடன் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு மகாகவிக்கு அஞ்சலி செலுத்தினர்.
அரசுத் தரப்பு மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பாரதியார் சிலைக்கு நேரில் வந்து தங்களின் வீர வணக்கத்தை செலுத்தினர்.
தனது எழுச்சியூட்டும் கவிதைகள் மூலம் மக்களிடம் விடுதலை தாகத்தையும், தேசப்பற்றையும் விதைத்த விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியாருக்கு, சென்னை மட்டுமன்றி அவரது பிறந்த ஊரான எட்டயபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது
Hindusthan Samachar / vidya.b