Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக சிறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்கும் வகையில், அவர் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்றும், பிற குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டதாகவும் கூறும் முதல்வர் மற்றும் சட்ட அமைச்சருக்கு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மிசா அல்லாத வழக்குகளில் கைது செய்யும்போது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும் என்றும், நீதிபதி அவரை விடுவிக்கவோ, ஜாமின் வழங்கவோ அல்லது நீதிமன்றக் காவலுக்கு அனுப்பவோ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுபோன்ற நடைமுறைகள் இல்லாமல் நேரடியாக கைது செய்து சிறையில் அடைப்பதே மிசா சட்டத்தின் தன்மை எனக் குறிப்பிட்டுள்ள அப்பாவு, இந்த அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாத முதல்வர் மற்றும் சட்ட அமைச்சரை நினைத்து தமிழகமே வெட்கித் தலைகுனிவதாக விமர்சித்துள்ளார்.
மேலும், “அரசு பணத்தை தொடமாட்டேன், தொட விடமாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன்” என்று கூறும் முதல்வர், அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மின்வாரியத்துடன் அதானி நிறுவனம் மேற்கொண்ட நிலக்கரி விநியோக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மின்வாரியத்துக்கு 7,000 கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரியை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், 4,000 முதல் 5,000 கலோரி எரிதிறன் கொண்ட நிலக்கரி வழங்கப்பட்டதாகவும், இதனால் சுமார் ரூ.826 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையகம் (CAG) சார்பில் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அப்பாவு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் என அவர் குறிப்பிட்ட அதானி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மற்றும் மின்துறை அமைச்சருக்கு தைரியம் உள்ளதா என்றும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்காமல் வழக்கம்போல் இது “வெத்து வேட்டு விஜய் Gang” ஆகவே இருக்குமா என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P