பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு வானதி சீனிவாசன் எதிர்ப்பு
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்
வானதி


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம், சட்டமன்றம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய நகரத்தை உருவாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி 25.55 ஏக்கரில் ரூ.1,200 கோடி மதிப்பில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கும் முன்பு, அதுதொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அவசரமாக தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றம் கட்டப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும் என்றும் விமர்சித்துள்ளார்.

“தலைமைச் செயலகம் என்பது மாநிலத்தின் அடையாளம். எனவே, புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், போதுமான நிலப்பரப்பில் பொருத்தமான இடத்தில் அமைக்க வேண்டும். பட்டினப்பாக்கத்தில் அமைத்தால் அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இடத்தைத் தேடும் நிலை ஏற்படும்” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், பட்டினப்பாக்கத்திற்கு வரும் சாந்தோம் நெடுஞ்சாலை குறுகலாக இருப்பதாகவும், அதனை அகலப்படுத்துவது சாத்தியமற்றது என்றும் அவர் கூறியுள்ளார். கலங்கரை விளக்கத்திலிருந்து கடற்கரை வழியாக பட்டினப்பாக்கம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அங்குள்ள மீனவர் குடியிருப்புகளை அகற்ற வேண்டியிருக்கும் என்றும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றாக, சென்னைக்கு அருகில் குறைந்தது 3,000 ஏக்கர் பரப்பளவில் தலைமைச் செயலகம், சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான குடியிருப்புகள் அமைந்த புதிய நகரை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த புதிய நகரில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், மெட்ரோ ரயில் வசதி மற்றும் அகலமான பல அடுக்கு சாலைகள் உள்ளிட்ட நவீன வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கான இடத்தை அடையாளம் கண்டு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தி புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ள வானதி சீனிவாசன், “தொலைநோக்குப் பார்வையுடன் முதலமைச்சர் செயல்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P