Enter your Email Address to subscribe to our newsletters

புவனேஸ்வரம் , 11 செப்டம்பர் (ஹி.ச.)
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 101 சிறுவர்-சிறுமிகளை 17 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட குழந்தைகளை ஒடிசாவுக்கு அழைத்து வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை பாதுகாப்பாக மீட்டு குடும்பத்தினரிடம் சேர்க்கும் நோக்கில், ஒடிசா போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் ‘ஆபரேஷன் அன்வேஷன்’ என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் செயல்பட்ட தனிப்படையினர், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் 10 முதல் 12 நாட்கள் வரை தங்கி, அங்குள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளின் உதவியுடன் குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், பீகார், ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட 17 மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையில் மீட்கப்பட்டவர்களில் சிலர் கடத்தப்பட்டவர்கள், சிலர் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றியவர்கள், மேலும் சிலர் குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது தெரியவந்தது.
கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 9 சிறுமிகள் மற்றும் 2 சிறுவர்கள் என 11 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 6 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியும் மீட்கப்பட்டனர்.
மேலும், குழந்தைகள் காப்பகங்களில் இருந்து 46 சிறுவர்கள் மற்றும் 37 சிறுமிகள் என மொத்தம் 83 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
இவர்களில் 3 மாத குழந்தையும் அடங்கும். மற்றொரு மாநிலத்தில் தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த சிறுமிக்கு இந்த குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. அந்த சிறுமியையும், குழந்தையையும் ஒடிசாவுக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஒரு வயது குழந்தையின் தாயையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த குழந்தை பாதுகாப்பாக அதன் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தைகள் கடத்தல், சுரண்டல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து அவர்களை பாதுகாப்பதும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக சேர்ப்பதுமே ‘ஆபரேஷன் அன்வேஷன்’ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என ஒடிசா போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA