Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
வார இறுதியையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும், இதனை தமிழக அரசு தடுக்கத் தவறிவிட்டதாகவும் பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னை முதல் மதுரை, திருச்சி செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.4,000 வரையிலும், கோவைக்கு ரூ.6,000-க்கும் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகள் ஏற்கனவே குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை சில நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டு, அதே இருக்கைகளை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிக கட்டணத்தில் மீண்டும் விற்பனை செய்வதாகவும் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். விமானம் அல்லது ரயிலில் பயணிக்க முடியாத பொதுமக்களிடம் இது நடத்தப்படும் 'பகல் கொள்ளை' எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு, திமுக ஆட்சியில் இருந்த அனுமதி (Permit) தொடர்பான ஊழல் த.வெ.க. ஆட்சியில் ஒழிந்துவிட்டதாகவும், தகுதிச் சான்றிதழ் பெற லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை என்றும் சில ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேர்மையான நிர்வாகத்தால் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும் எனக் கூறி, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் 500 பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகும் அதிக கட்டண வசூல் குறித்த தகவல்கள் அவர்களின் முந்தைய அறிக்கைகள் பொய்யானவை என்பதை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதி மற்றும் சோதனைச் சாவடிகளில் நடைபெறும் கட்டாய வசூல் உள்ளிட்ட பழைய முறைகேடுகள் மீண்டும் த.வெ.க. ஆட்சியில் திரும்பியுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என நீதிமன்றங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன; ஆனால் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகவும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்ட முன்பதிவுகளை ரத்து செய்திருந்தால், அவற்றை பழைய கட்டணத்திலேயே மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்றும், பண்டிகைக் காலத்திற்கான கட்டண உச்சவரம்பை அரசு உறுதியாக அறிவித்து, அதனை மீறும் நிறுவனங்களின் அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்னி பேருந்து கட்டண விவகாரம் வெறும் கட்டணம் தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், போக்குவரத்து என்ற பெயரில் நடைபெறும் அப்பட்டமான 'பகல் கொள்ளை' என்றும் நாராயணன் திருப்பதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P