Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, கிண்டியில் தலைமைச் செயலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் மா. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘ஃபோர்ஷோர் எஸ்டேட்’ என அழைக்கப்பட்ட பகுதி, 1968ஆம் ஆண்டு நடைபெற்ற 2-வது உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழ்நாடு அரசால் ‘பட்டினப்பாக்கம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பட்டினப்பாக்கத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை செப்டம்பர் 2026-ல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தால் மீனவ மக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் என மா. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். சீனிவாசபுரம், முள்ளிக்குப்பம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் கடலை நம்பி மீன்பிடித் தொழிலையும், லூப் சாலையில் மீன் விற்பனையையும் மேற்கொண்டு வருவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சாந்தோம் மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ள நிலையில், ஏற்கனவே அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாகவும், பிரம்மாண்ட அரசு வளாகம் அமைக்கப்பட்டால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பும் தினசரி பயணமும் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சுமார் 20 லட்சம் சதுர அடியில் 15 மாடி அரசு வளாகம் அமைந்தால் தினசரி ஆயிரக்கணக்கான அரசு, விஐபி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிக்கும் என்றும், இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அமைதியான சூழல் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாலைகளை மேலும் அகலப்படுத்தவும், உள்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் போதிய இடவசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்றும் மா. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பட்டினப்பாக்கத்தில் பல்வேறு அரிய பறவை இனங்கள் தங்கும் இயற்கைச் சூழல் உள்ளதாகவும், தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் பறவை இனங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, கிண்டி அருகே 40 ஏக்கருக்கும் மேற்பட்ட இடம் இருப்பதாகக் கூறியுள்ள மா. வெங்கடேசன், அந்த இடத்தை தமிழக அரசு ஆய்வு செய்து அங்கு தலைமைச் செயலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam